ஞாயிறு, 20 ஜூலை, 2014

அதிதி - சினிமா விமர்சனம்

ழையா 'விருந்தாளி’யாக வந்து அதிரவைக்கும் 


பிரமாண்டக் கட்டுமான நிறுவனத்தின் புராஜெக்ட் மேனேஜர் நந்தா. அவரது குழந்தையைக் கடத்திவைத்திருப்பதாகச் சொல்லி மிரட்டுகிறார் நிகேஷ்ராம் (அறிமுகம்). துப்பாக்கி முனையில் நந்தாவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பல செயல்களை அவரையே செய்யவைக்கிறார். அவரது மனைவி அனன்யாவையும் அபாயமாகச் சீண்டுகிறார். யார் அவர்? அவருக்கும் நந்தாவுக்கும் என்ன விரோதம்? குழந்தைக்கு என்ன ஆனது?.. என்பதே படம்!
'பட்டர்ஃப்ளை ஆன் எ வீல்’ என்ற ஆங்கில சினிமா மல்லுவுட்டில் 'காக்டெய்ல்’ என்று உருமாறி, கோலிவுட்டில் 'அதிதி’யாக அவதாரம் எடுத்திருக்கிறது. ஆங்கிலத்தின் மெயின் அத்தியாயத்தை வைத்துக்கொண்டு, ஏழைச் சிறுவர்களுக்கு உணவு, பாலியல் தொழிலாளிக்குப் பாசம் என தமிழ் டச் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பரதன். 'ஹீரோவை மிரட்டுற இந்த வில்லன் யாரு?’ என்று யோசிக்கவைத்து, 'அட...’ என்று ஹீரோ - வில்லன் முகங்களையே மாற்றியிருக்கும் ட்விஸ்ட்... படத்தின் பலம். பயணம் முழுக்கத் தொக்கி நிற்கும் அத்தனை கேள்விகளுக்கும் கிளைமாக்ஸ் பதில், பளிச் லாஜிக். ஆனால், நாள் முழுக்க நீளும் அந்தப் பயணம்... 'ஜீபூம்பா மேஜிக்’!
அலட்டல் மிரட்டல் எதிரிகளைச் சமாளிக்கும் இடங்களில் நந்தா ஸ்மார்ட். ஆனால், தன் வாழ்நாள் சேமிப்பு எரியும்போது, நிறுவனத்தின் ரகசியம் பறிபோகும்போது, மனைவியை ஒருவன் சீண்டும்போது... எத்தனை டென்ஷன் வரவேண்டும்? மேக்கப்கூட கலையலியே பிரதர்?
தவிப்பு, பதற்றம், பாசம், காதல், கனிவு, கோபம்... என எல்லா ஏரியாலும் செம ஸ்கெட்ச் அனன்யா. பார்வை, பேச்சு, செயல் என அனைத்திலும் எரிச்சல் கலக்கும் கதாபாத்திரத்துக்கு நிகேஷ்ராம் ஓ.கே. ஆனால், இறுக்கி முறுக்கி, பல்லைக் கடித்துக்கொண்டே பேசித் திரிவது, ஒருகட்டத்தில் ஓவர்டோஸ்!
'சஸ்பென்ஸ் த்ரில்லராக’ திடுக், ஜிவுக் எனக் கடக்கவேண்டிய அத்தியாயங்களுக்கு இடையில் 'மொக்கை கலாட்டா’ செய்கிறது தம்பி ராமையாவின் ராவடி காமெடி. ஏரியா தாதாவை ஒரே தொலைபேசி அழைப்பில் பதறச்செய்யும் நந்தா, நாள் முழுக்க நிகேஷ்ராமின் பேச்சுக்குக் கட்டுப்படுவது என்ன 'ஸ்மார்ட்னெஸ்’? 'வில்லன் யார்... விவகாரம் என்ன?’ என்று தெரிந்ததுமே படம் முடிந்துவிடுகிறதே. அதன் பிறகும், ஒரிஜினலில் இல்லாத அந்த சென்ட்டிமென்ட் கிளைமாக்ஸ் தேவையா? அதிலும் ஆண் பக்காவாகத் தப்பிவிட, தப்பு செய்ய முயற்சித்த பெண் மட்டும் பாதிக்கப்படுவது என்ன நியாயம் ப்ரோ? தராசு முள்ளு தள்ளாடுதே!
அந்தக் கட்டக்கடைசித் திருப்பத்தை நம்பி மிக மெதுவாகப் பயணிக்கும் திரைக்கதையை, இன்னும் டாப் கியரில் கிளப்பியிருந்தால், தடபுடல் விருந்து வைத்திருக்கலாம்... இந்த விருந்தாளிக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக