ஒரு கோடை விடுமுறை, மூன்று சிறுவர்களுக்குச் சாகசமாக அமைந்தால்... அதுவே
பொன்வண்டு பிடிப்பது, கிரிக்கெட் விளையாடுவது, பட்டம்
விடுவது, பூவரசம் பீப்பீ ஊதுவது... என உற்சாகமாக இருக்கும் பிரவீன், கௌரவ்
காளை, வசந்த்... மூவரும், பலாத்காரக் குற்றம் ஒன்றைப் பார்க்கிறார்கள்.
அந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கிராம மக்களிடம் சிக்கவைக்க சாகச
முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிறுவர்களால் அதைச் சாதிக்க முடிந்ததா
என்பதே படம்!
வெவ்வேறு குணாதிசயங்கள்கொண்ட மூன்று சிறுவர்களின்
சிறப்புத் திறமை ஒவ்வொன்றும், குற்றவாளிகளை எப்படி மாட்டிவிட உதவுகிறது
என்று காட்சிப்படுத்திய விதத்தில் ஈர்க்கிறது அறிமுக இயக்குநர் ஹலிதா
ஷமீமின் இயக்கம்.
எப்போதும் நிதானமாக அறிவுபூர்வமாகப் பேசும் பிரவீன்,
தன் தோழியைப் பார்த்ததும் அசடு வழியும் கௌரவ் காளை, நண்பர்களின் சண்டையைச்
சமாதானப்படுத்தும் வசந்த், சிரிப்பும் பூரிப்புமாக 'முகமொழி’யிலேயே கவரும்
வர்ஷினி... என, படத்தின் சிறுவர் கதாபாத்திரங்களின் பிரத்யேக டிசைன்ஸ்,
கச்சிதம்!
கூச்சம், தயக்கம் இல்லாமல் அத்தனை ஜூனியர்
நட்சத்திரங்களும் அழகாக ஜொலித்திருக்கிறார்கள். சின்னத் துப்பை நூல்
பிடித்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும் போலீஸ் தேடி வரும்போது
எஃப்.எம்-மை இடம் மாற்றுவதுமாக... சின்னச் சின்ன பிரில்லியன்ட் ஐடியாஸ்
நச்.
கௌரவ்
காளை - வர்ஷினி இடையிலான அன்பும் பாசமும் அந்தப் பருவத்துக்குரிய
குறுகுறுப்பு. ஆனால், இந்தப் படத்தில் எதற்கு அந்தத் தேவை இல்லாத
துருத்தல்?! பலாத்கார வன்முறை, கொலை... என எதற்கும் துணிந்த வில்லன்கள்
எவ்வளவு டெரராக இருக்க வேண்டும்? ஆனால், வில்லன்கள் நால்வரும் காமெடி பீஸாக
வலம் வருவதால், 'எப்படியும் மாட்டிக்கத்தானே போறாங்க...’ என்று முடிவை
ஊகிக்க முடிகிறதே!
''இப்போ தமிழ்த் தாத்தா நம்ம கலைஞர்தான். அப்போ தமிழ்
மாமா நம்ம கோபிநாத்தான். ஆனா, அவர் கோட் - சூட்டைக் கழட்டணுமே?'' என்று
ஆங்காங்கே சிரிக்கவைக்கும் வசனங்கள் பளிச். ஏரியில் சிதறும் மழைத்துளிகள்,
இலையைச் சாப்பிடும் பொன்வண்டு, ரேடியோவின் ஏரியல் மேல் செல்லும் காட்சி...
என மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் கண்ணாடித் துல்லியம். அருள்தேவ்-வின்
பின்னணி இசை மட்டும் செம ஸ்கோர்!
அத்தனை நவீன வசதிகளுடன் ஒரு கிராமம், அதில் சிறுவர்கள் நடத்தும் ரகசிய எஃப்.எம். என்பதெல்லாம்... ஜுஜுலிப்பா காமெடி!
லாஜிக் பார்க்காவிட்டால் இந்தப் பீப்பி கிராமத்துக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக