ஞாயிறு, 20 ஜூலை, 2014

மஞ்சப்பை - சினிமா விமர்சனம்

டுக்குமாடிக் குடியிருப்பு மனிதர்களின் இதயங்களில் இடம் பிடிப்பாரா, 'மஞ்சப்பை’ தாத்தா?


சாஃப்ட்வேர் வேலைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் விமல், அதற்கு முன் தன் தாத்தா ராஜ்கிரணை சென்னைக்கு வரவழைத்து தன்னுடன் தங்கவைக்கிறார். தாய்-தந்தை இல்லாத தன்னை வளர்த்த தாத்தாவைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொள்கிறார். ஆனால், ராஜ்கிரண் வெள்ளை உள்ளத்துடன் செய்யும் செயல்கள், விமலின் காதலி லட்சுமிமேனன் தொடங்கி, அப்பார்ட்மென்ட் ஆசாமிகள் வரை அனைவரையும் எரிச்சலுக்கு உள்ளாக்குகின்றன. ஒருகட்டத்தில் விமலின் அமெரிக்க வேலைவாய்ப்பும் பறிபோகிறது. இதனால் விமலும் தன் தாத்தாவை வெறுக்க, குற்றவுணர்ச்சியில் தலைமறைவாகிறார் தாத்தா. ஆனால், சில பல திருப்பங்களுக்குப் பிறகு தாத்தாவின் அன்பை எல்லோரும் புரிந்துகொண்டார்களா... தாத்தா என்ன ஆனார் என்பது படம்!
மஞ்சப்பை தாத்தா - ஐ.டி. பேரன்... இவர்களுக்குள் நிகழும் ரசவாத அன்பு எனப் புதிய களம். நாடகத்தனம் நிரம்பி வழிந்தாலும், தாத்தா - பேரன் அன்பை உணர்வுபூர்வமாகப் படைக்க முயன்ற அறிமுக இயக்குநர் ராகவனுக்கு வாழ்த்துகள்!
பாசக்கார அப்பாவாக தமிழ் ரசிக மனங்களில் பதிந்துபோன ராஜ்கிரணுக்கு, இதில் வெள்ளந்தித் தாத்தா புரமோஷன். எவர் மீதும் பரிவு காட்டுவதும், எகிறி கறார் கண்டிப்பு செலுத்துவதுமாக... உதாரணத் தாத்தா. டிஷ் ஆண்டெனாவில் வத்தல் காயப்போடுவது, 'அனகோண்டா’ படம் பார்த்துவிட்டு 'எதுக்குக் காட்டுக்குள்ள போகணும்... பாம்புகிட்ட கடி வாங்கி சாகணும்?’ என சவடால் அடிப்பது, குடியிருப்பு நீரூற்றில் குளிப்பது, எம்.ஜி.ஆர் என்றால் நெக்குருகுவது, அந்நியக் கொடியைப் பார்த்தால் நெம்பித் தள்ளுவது... என பலே விருந்து வைக்கிறார். ஒட்டுமொத்தப் படத்தையும் தன் தலையில் தூக்கிச் சுமக்கிறார்!
என்ன ஆச்சு விமல்? அமெரிக்க விசாவுக்குத் தடை வரும்போது பதற்றம் இல்லை... தடை நீங்கும்போது உற்சாகம் இல்லை! லட்சுமியுடனான காதலிலும் வைட்டமின் இல்லை. கதை நாயகனிடம் இத்தனை அசட்டையா? பேட்ச் பேட்ச் மேக்கப், க்ளோஸ்-அப் பேக்கப் என பல காட்சிகளில் பதறவைக்கிறது லட்சுமியின் பிரசன்ஸ். அதிலும் சில்லறை காரணங்களுக்காக ராஜ்கிரண் மீது அவர் சிடுசிடுப்பது... செம கடுப்ஸ்!
'குஞ்சு நைனா’, 'தொந்தி படவா’, 'கெழவி மாதிரியே இருக்கா’ என்று ஆங்காங்கே கிராமத்துக் கிச்சுகிச்சு. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து ராஜ்கிரண் செய்யும் வெகுளிச் சேட்டைகள்தான் முன்பாதியைக் கலகலப்பாக நகர்த்துகின்றன. ஆனால், பின்பாதியில் காதல் கரைச்சல், அமெரிக்கா புகைச்சல் என அதே மாவு அகெய்ன் அண்ட் அகெய்ன்! அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரி, எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் மெரினா பீச்சில் பைக் ரைடு வருவதெல்லாம்... பிம்பிளிக்கி பிளாக்கி!
ரகுநந்தன் இசையில் 'ஆகாய நிலவு...’, 'சட்டெனத் தூறலும்..’ என இரண்டு மெலடிகள் ரசனை ரகம்.
திக்கும் திரைக்கதையில் சில பல பள்ளங்கள். ஆனாலும், முட்டுக்கொடுத்துத் தூக்குகிறது தாத்தா பாசம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக